Promissory Note tamil

கடன் வழங்கும் போது எழுதப்படும் Promissory Note சட்டப்படி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும்

9897

புரோ நோட்டு சட்டம் | பிராமிசரி நோட்டு எழுதும் முறை

கடன் வழங்கும் போது எழுதப்படும் Promissory Note சட்டப்படி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும்?

ஒரு கடனின் ஒப்பந்த காலம் 5 வருடமோ அல்லது 7 வருடமோ இருக்கலாம். ஆனால் கடன் புரோநோட்டின் ஆயுட்காலம் மூன்று வருடம் தான். இதென்ன ஏழரையாக இருக்கிறதே என்கிறீர்களா?
உண்மைதான். எந்த ஒரு கடன் உறுதிமொழி குறிப்பும் (pronote) எழுதிய தேதியிலிருந்து 3 வருட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

 

அதன் பிறகு அது செல்லாது. இது வெள்ளைக்காரன் காலத்திய விதி.

 1. ஒரு உறுதிமொழிக் குறிப்பு (புரோநோட்) Negotiable Instruments Act, 1881 – இன் கீழ் எழுதப் படுகிறது.
 2. 1899 ஆம் ஆண்டின் இந்திய முத்திரைச் சட்டம் (Indian Stamp Act) அதன் முத்திரை கட்டண விதிகளை வரையறுக்கிறது
 3. இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 (The Indian Contract Act) புரோநோட்டின் செல்லுபடி காலத்தை வரையறுக்கிறது.
 4. இந்தச் சட்டங்களுக்கும் முன்னால், 1859-லேயே “ஒரு கடனாளி காலவரையின்றி கடன் நடவடிக்கை அச்சுறுத்தலின் கீழ் வாழக்கூடாது” என்பதற்காக கடனை திருப்பி கேட்பதற்கு ஒரு கால வரம்பு சட்டம் (The law of limitation) இயற்றப்பட்டது.
 5. இந்த சட்டமே கால வரம்பை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறதே என்று ஆலோசித்து, நல்லவேளை 1963-ல் அதை மறுவரையறை செய்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் ஆங்கிலேயர்கள் காலத்திய சட்டங்கள். அவற்றை மாற்றுவதற்காக தொட்டால் எங்கே, எப்படி ஷாக் அடிக்கும், யாருக்கு ப்யூஸ் போகும் என்பது தெரியாதென்பதால், இவை இன்னும் நாட்டில் ஊடாடும் தொன்மையான மின்சார கம்பிகள். அதனால் இவற்றை தொடாமலே வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

சில முக்கிய தகவல்கள் | புரோ நோட்டு சட்டம் | பிராமிசரி நோட்டு எழுதும் முறை

 • திருப்பிச் செலுத்துவதற்கான வாக்குறுதியை தவிர எந்த ஒரு நிபந்தனையையும் புரோநோட்டில் குறிப்பிடக்கூடாது.
 • போதிய முத்திரை கட்டணம் செலுத்தப் பட்டிருக்கவேண்டும்.
 • கடனாளி அல்லது அவரது முகவர் (Agent) கையெழுத்திடலாம்.
 • மைனர் கையெழுத்திட புரோநோட் செல்லாது.
 • புரோநோட் ஒன்றை வைத்தே கொடுத்தக் கடனை திருப்பி கேட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம்.
 • வங்கியில் வாங்கிய கடனுக்கு நீங்கள் கையெழுத்திட்ட புரோநோட், அதன் தேதியிலிருந்து 3 வருடம் தாண்டி விட்டால், அதை நீட்டிக்கும் வகையில், உங்களிடம் ஒரு நீட்டிப்பு கடிதம் வாங்கி கொள்ளுவார்கள்.
 • அப்படி வாங்காமல் விட்டால், 3 வருடம் கழித்து அது “நாள் தள்ளி” போன புரோநோட் (Time barred Pronote) என்றாகிவிடும். இது வேலைக்காகாது.
 • இதற்கும் ஒரு வழியிருக்கிறது. கடன் வாங்கியவர் சம்பந்தப்பட்ட கடனை தொடர்ந்து செலுத்துவதாக ஒரு வெளிப்படையான வாக்குறுதியைக் எழுத்தில் தரவேண்டும்.
 • அப்படி எழுத்தில் கொடுத்தால் இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் பிரிவு 25 (3) படி (Indian Contract Act) புரோநோட்டின் ஆயுள் காலம் நீட்டிக்கப்படுகிறது.
 • புரோநோட் எழுதிக்கொடுத்த “புரொ” ஒளிந்து மறைந்து கண்ணாமூச்சி விளையாடுகிறார் அல்லது கண் முன்னே இருந்தாலும் தர மறுக்கிறார் என்றால் என்ன செய்வது?
 • “நாள் தள்ளிப்” போவதற்கு (Before Time bar) முன்னால் வழக்கு போட்டுவிட வேண்டியதுதான்.
 • ஒருவேளை அந்த வழக்கு முடிய 16 வருடங்கள் ஆகலாம். இருந்தாலும் வழக்கு போடுவதற்கு இந்த கால வரம்பு இருக்கிறது.
 • கடன் திருப்பிக் கிடைக்குமா என்பதெல்லாம் வேறு விஷயம். வழக்கு போட்டுவிட்டால் மேலே சொன்ன பாயிண்ட் 4 செயலிழந்து விடும்.
 • இந்த கால நீட்டிப்புக்கு , வங்கிதுறைகென இன்னும் “சில எளிய வழிகளையும்” சட்டம் வழிவகை செய்கிறது. அதெல்லாம் தொழில் ரகசியம்.
 • நீங்கள் தனிநபராக இருந்தால் மூன்று வருடம் முடியும் முன்பு புதிதாக ஒரு புரோநோட் எழுதிக் கொள்வது நல்லது.
 • தனி நபர்கள் கடன் தரும்போது, ஒரு பாதுகாப்புக்காக கிராஸ் செய்யப்பட்ட காசோலைகள் மூலம் கடன் கொடுத்து, காசோலைகளின் விவரங்களை புரோநோட்டில் குறிப்பிடலாம்.

 

சட்டம் ஒரு இருட்டறை. மேலே சொன்ன இடியாப்ப சிக்கல்களை வைத்து பல விசித்திர வழக்குகளை இந்திய நீதிமன்றங்கள் சந்தித்து வருகின்றன. வங்கியாளர்களும்தான்.

கடை திறப்பு விழாக்களுக்கு போவதுதான் வங்கி மேலாளர் வேலை என்று இறுமாப்பாக இருந்தால், கடன் திருப்பித்தராத வாடிக்கையாளர்களை நீதிமன்றத்தில் சந்திப்பதும் அதன் ஒரு பகுதியென்று பின்னால்தான் தெரிந்தது.

அனைத்து வங்கியாளர்களுக்கும் கிடைக்கும் மறக்க முடியாத மகானுபவம், கடன் கொடுத்துவிட்டு பல நீதிமன்றங்களில் கூண்டேறி சாட்சி சொல்லுவதுதான்.

 

நன்றி :
மதிவாணன்
30+ வருடங்கள் வங்கி பணியில் அனுபவம்
தமிழ் கோரா

 

Keywords: கடன் பத்திரங்கள் என்றால் என்ன, கடன் பத்திரம் எழுதிக் கொள்வது, கடன் உறுதி சீட்டு, புரோ நோட்டு சட்டம், அடமான கடன் சட்டம், பிராமிசரி நோட்டு எழுதும் முறை, Promissory Note tamil

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *