organic certificate

வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு உதவும் அரசு அமைப்புகள்

வேளாண் பொருள் ஏற்றுமதிக்கு உதவும் அரசு அமைப்புகள் how to

export agri product in Tamil :

அறிமுகம்

இந்திய நாடு வேளாண் துறையில் பல வெற்றிகளைக் கண்டறிந்தபோதிலும், வருங்காலத்திலுள்ள மக்கள் தொகைக்குத் தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு அதிக அளவில் தேவை உள்ளது. ஏனெனில் நடுத்தர மக்களின் எண்ணிக்கை மற்றும் வருவாய் அதிகரித்து வருவதால், அவர்களின் பொருட்கள் வாங்கும் பழக்கங்களும் மற்றைய நாடுகளைப் போல மாறி வருகிறது. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நமது வேளாண் உற்பத்தி அமைப்பை மாற்றியமைத்து பண்ணையிலிருந்து நுகர்வோர் வரையுள்ள சங்கிலித்தொடரை மேம்படுத்தி இப்பொழுதே ஆவணங்கள் எடுத்துக்கொண்டால்தான் எதிர்காலத்தில் வேளாண் பொருட்களுக்கு அண்டை நாடுகளை நம்பியிருக்கும் நிலை ஏற்படாது.

பொருளியல் முன்னேற்றத்தின் வரலாற்றை அலசிப் பார்த்தால் நாட்டின் வருவாயில் வேளாண்மையின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. சுதந்திரத்தின் போது 50 விழுக்காடாக இருந்த வேளாண் பொருட்கள் தற்போது 24 விழுக்காடாக குறைந்து உள்ளது. வளர்ந்த நாடுகளில் வேளாண்மையை சார்ந்த மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் நாடான இந்தியாவில் இன்னும் வேளாண் சார்ந்த மக்கள் தொகை 60 விழுக்காடாக உள்ளது. உழவர்களுக்கு, உணவு தானிய உற்பத்தியில் நல்ல வருவாய் கிடைக்காததால் மதிப்புள்ள வேளாண் பொருட்களான பழங்கள், காய்கறிகள், கரும்பு, பருத்தி போன்ற பயிர்களின் சாகுபடி அதிகளவில் உள்ளது. இம்மதிப்பு மிக்க பொருட்களைத் தயாரிக்க அதிக முதலீடு உள்ள தொழில் நுட்பங்களான நுண்ணிய வேளாண்மை, பதனிடும் தொழில், குளிர்படுத்தப்பட்ட ஊர்திகள் மற்றும் கிடங்குகள் அமைக்க பல வாய்ப்புகள் உள்ளன.

உற்பத்தி செய்த வேளாண் பொருட்களின் நச்சுத்தன்மை அதிகளவில் உள்ளதால் சுகாதார செலவும் அதிக அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே, மக்கள் இயற்கை வேளாண்மையில் தயாரித்த பொருட்களை அதிக அளவில் நாடிச் செல்கின்றனர். சாகுபடிக்கு உகந்த நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் பாசன நீர் கிடைப்பதும் அரிதாக உள்ளது. அதனால் சொட்டு நீரிலிருந்து அதிக அளவில் வேளாண்மை உற்பத்தி ஈட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே நுண்ணிய வேளாண்மையின் மூலம் நீரில் கரையும் தன்மையுள்ள உரங்களைப் பயன்படுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்யவும் மற்றும் பல வேளாண்மை சார்ந்த தொழில்கள் துவங்கவும் வாய்ப்புள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொருளை பண்ணையிலேயே தரம் பிரித்து நுகர்வோரை ஈர்க்கும் வண்ணம் பெட்டிகளில் வைத்து அவற்றை உற்பத்தி செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதியில் அண்டைய நாடுகள் விரும்பும் வேளாண் பொருட்களை செய்யவும் அவற்றின் தரத்தை நிலைப்படுத்த, தரக் கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள் அமைப்பதிலும் வாய்ப்புகள் உள்ளன.

வேளாண் தொழில் தொடங்க வாய்ப்புகள்

உணவு பதனிடும் தொழில்

உணவு தானியங்களை சமைத்து உண்ணுவது மாறி, நேரமின்மை காரணமாக உடனுக்குடன் சமைத்து சாப்பிட ஏதுவாக பதனிடும் தொழில்கள் அமைக்கவும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. மேலும் வருடத்தில் சில காலங்களில் உற்பத்தியாகும் காய்கறி, பழங்களை பதனிட்டு ஆண்டுதோறும் தேவையைப் பூர்த்தி செய்ய பல தொழில்கள் அமைத்திடலாம். உலகிலேயே இந்தியாவில் அதிக அளவில் பால் உற்பத்தியாகிறது. தனியார் முதலீடும் அதிகளவில் உள்ளது. உற்பத்தி செய்த பாலை பல மதிப்பு மிக்க பொருட்களாகிய வெண்ணெய், நெய், பாலாடை, கோவா போன்ற பொருட்களை பதனீட்டு முறையில் அதிக அளவில் உற்பத்தி செய்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்வதற்கு பல தொழில்கள் தொடங்கிடலாம்.

தேசிய தோட்டக்கலை இயக்கம்

மத்திய அரசால் துவங்கப்பட்டு, நாற்றங்கால், காய்கறி, பழ உற்பத்தி மற்றும் அவற்றை பதனிடும் தொழில்கள் போன்றவற்றிற்கு அரசு மானியம் அளித்து வேளாண் பட்டதாரிகளை அதிக அளவில் தொழில் முனைவோராக மாற்ற கொள்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை வாரியம்

இவ்வாரியம் 1984-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வரையறுக்கப்பட்ட மண்டலங்களில் அதிக தரம் வாய்ந்த தோட்டப் பயிர் பண்ணைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பின் செய் நேர்த்தி மேலாண்மையிலும் அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. சந்தை மற்றும் தகவல் அமைப்புகளை மேம்படுத்தி தோட்டக்கலை புள்ளி விபரங்கள் அனைவருக்கும் சென்றடைய தேவையான நிதி உதவி அளிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட தோட்டக்கலை இரகங்களுக்கு தொழில் நுட்ப உத்திகளை மேம்படுத்தவும், புதிய பொருட்கள் தயாரிக்கத் தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் நிதி அளிக்கப்படுகிறது. உழவர்களுக்கும், பதனிடும் தொழில் உரிமையாளர்களுக்கும் மற்றும் நிர்வாக இயக்குநர்களுக்கும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான விரிவாக்கத் திட்டங்களுக்கும் நிதி அளிக்கப்படுகிறது.

ஏற்றுமதி பதனிடும் மண்டலம்

இம்மண்டலத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு உண்டு. மேலும் அந்நிய செலாவணியை மேம்படுத்தவும் ஆவண செய்யப்படுகிறது.
சிறப்பு பொருளாதார மண்டலம்

இம் மண்டலங்களில் தொழில் முனைவோர், தொழில் தொடங்கத் தேவையான அனைத்துத் துறை சான்றிதழ்களையும் ஒரே இடத்தில் பெற்றிடலாம்.

வேளாண் ஏற்றுமதி மண்டலம்

உலக ஏற்றுமதியில் இந்திய வேளாண் ஏற்றுமதியை 0% விழுக்காட்டிலிருந்து 1 விழுக்காடாக உயர்த்திட வேளாண் ஏற்றுமதி மண்டலம் இந்தியாவில் துவங்கப்பட்டது. இதுபோன்ற மண்டலங்கள் மாம்பழத்திற்கு திண்டுக்கல்லும், மலர்களுக்கு நீலகிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு, பல வேளாண் தொழில் துவங்கிட ஏதுவாக செயல்பட்டு வருகின்றன.

உணவுப் பூங்கா

உணவு பதனிடும் துறையின் பங்கு அதிக அளவில் தேவைப்படுவதால் அதிலுள்ள வாய்ப்புகளை எடுத்துக்காட்டிட விருதுநகர் மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்பட்டு நன்கு செயல்பட்டு வருகிறது.

ஏற்றுமதி இறக்குமதி வங்கி

ஏற்றுமதி இறக்குமதி செய்வோருக்குத் தேவையான நிதி உதவி, சான்றிதழ்கள் போன்ற உதவிகளை செய்திட இந்த வங்கி நிறுவப்பட்டது. இவ்வங்கியின் மூலம் பல வேளாண் தொழில் முனைவோர் நன்மை அடைந்திடலாம்.

வர்த்தகக் கொள்கை

வேளாண் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு உலக வர்த்தக நிறுவனம் பல கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. அவை உற்பத்தி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தரம், தரக்கட்டுப்பாடு, நச்சுத் தன்மை செய்யக்கூடிய பொருள்களின் அளவு, குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தாமல் இருத்தல், அரசு பொருட்கள் வாங்கும் போதும் வெளிநாட்டார்களையும் ஒப்பந்த போட்டியில் பங்குபெற செய்தல் போன்ற பல கொள்கைகள் ஆகும். இந்த கொள்கைகளை நன்கு அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும். இதே போல் இறக்குமதி செய்திடும் போது இக்கொள்கைகளை கடைப்பிடித்திட வேண்டும்.

இவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் பல வழிமுறைகளை கீழ்க்கண்டவாறு வகுத்து உள்ளது.

வேளாண் ஆலோசனை மற்றும் தொழில் மையங்கள்

விவசாயிகளின் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், வேளாண் ஆலோசனை மற்றும் தொழில் மையங்கள் கட்டண முறையில் விவசாயிகளுக்கு சேவை செய்து வருகின்றன. உரிய பயிர்களைத் தேர்ந்தெடுத்தல், பயிர்களின் சாகுபடி முறைகள், அறுவடைக்குப் பின் செய்நேர்த்தி, வேளாண் தகவல்கள், விலை நிர்ணயம், சந்தை தகவல்கள், பயிர் காப்பீடு மற்றும் பயிர் சுகாதார மேம்பாடு பற்றி விவசாயிகளுக்கு இம்மையங்கள் அறிவுரைகள் வழங்குகின்றன.

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையமானது கடந்த ஆண்டில் பருத்தி, தக்காளி, மஞ்சள், மிளகாய், மக்காச்சோளம், வெங்காயம், காய்கறிகள், எள், சூரியகாந்தி, உளுந்து மற்றும் கரும்பு ஆகியவற்றிற்கான விலை முன்னறிவிப்புகளை 7 ஆங்கில நாளேடுகளிலும் 6 தமிழ் நாளேடுகளிலும் மொத்தமாக 75 வெளியீடுகளை அளித்துள்ளது. மேலும் இத் தகவல்கள் விவசாயிகளைச் சென்றடையும் வண்ணம் 21 விற்பனைக் குழுக்களுக்கும், 14 வேளாண் அறிவியல் நிலையங்களுக்கும், 34 வேளாண் ஆராய்ச்சி நிலையங்களுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டன.

அளிப்பு தொடர் மேலாண்மை

அளிப்பு தொடர் மேலாண்மையை திறம்பட செயல்படுத்தி, அதன் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வந்த மாணவர்கள் தங்களது முதுகலை பட்டப்படிப்புக்குத் தேவையான ஆராய்ச்சிகளை தற்பொழுது நிலவும் அளிப்பு தொடர் மேலாண்மையின் மூலம் பயின்று வருங்காலத்தில் அவற்றை எவ்வாறு செவ்வனே எடுத்து சொல்ல வேண்டும் என்பது பற்றி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

வேளாண் தொழில் இயக்ககம்

புதிய ஆராய்ச்சி முடிவுகளை வணிகப்படுத்த வேளாண் தொழில் இயக்ககம் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசுக்கு ஏற்றுமதி சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்க வேளாண் உணவு பதனீட்டு மையம் மற்றும் ஏற்றுமதி இணையம் என்ற மையத்தை அமைத்து இதன் மூலம் வேளாண் பதனீட்டு பொருள்களை கண்டறிந்து அவற்றை ஏற்றுமதி செய்யவும் இம்மையம் ஆலோசனை வழங்க உள்ளது.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்- 641 003

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள் மற்றும் விவசாய செய்தி  கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி