ஒருங்கிணைந்த பண்ணையம்

ஆடு, மாடு, கோழி,மீன் மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

ஆடு, மாடு, கோழி மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களை இணைத்து செயல்படும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பின்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும்.

பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், வருடம் முழுவதும் தொடர்ந்து பண வரவுக்கு வழி செய்தல், வருடம் முழுவதும் குறிப்பாக விவசாயிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருள்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளத்தை மேம்படுத்துதல், பயிரின் மகசூலை பெருக்குவதோடு உரச் செலவுகளைக் குறைக்க முடியும்.

துணைத் தொழில்கள்

 • நன்செய் நிலத்தில் பயிருடன் கோழி அல்லது புறா அல்லது ஆடு அல்லது மீன் வளர்ப்பு போன்ற தொழில்களை ஒருங்கிணைக்கலாம்.
 • ஒரு ஏக்கர் நிலத்தில் 70 சதவீதம் பயிர்ச் சாகுபடி செய்வதற்கும், 10 சதவீதம் தீவனப் பயிர்ச் சாகுபடி செய்வதற்கும், 5 சதவீதம் ஆட்டுக் கொட்டகை அமைப்பதற்கும், 15 சதவீதம் 3 மீன் குட்டைகள் அமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • ஒவ்வொரு மீன் குட்டையிலும் கட்லா, ரோகு, மிர்கால், புல்கெண்டை என 400 மீன் குஞ்சுகள் வளர்க்கலாம். மீன்களுக்கு உணவாக மீன் குட்டைகளின் மேல் வளர்க்கப்பட்ட கோழி, புறாவிலிருந்து கிடைக்கப் பெற்ற எச்சம், ஆட்டு எரு பயன்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணையப் பயிர்த் திட்டத்தில் நெல், வணிகப் பயிர்கள் சாகுபடி, கால்நடைத் தீவனத்துக்காக கம்பு, நேப்பியர் புல், வேலிமசால் கலப்புப் பயிராக பயிரிடலாம்.
 • பயிர், மீன், ஆடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும்போது 10 டன் எரு கிடைக்கும். கோழி, புறா, ஆட்டு எரு மீன்களுக்கு உணவாக இடப்பட்டதில் மீன்கள் அறுவடை செய்த பின்பு வண்டல் மண் குட்டையிலிருந்து கிடைக்கும். கோழி, புறா எச்சம், ஆட்டு எரு மீன்களுக்கு உணவாக இடப்பட்டு சுழற்சி செய்வதன் மூலம் தழை, சாம்பல், மணிச்சத்து கிடைக்கும். நன்செய் நிலத்தில் பயிருடன் புறா அல்லது கோழி அல்லது ஆடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்க்கும்போது வளமான இயற்கை உரத்துடன் அதிக உற்பத்தித் திறன், வேலைவாய்ப்பு, நிகர இலாபம் பெற முடியும்.
 • புன்செய் நிலத்தில்… புன்செய் நிலத்தில் பயிருடன் கறவைமாடு, மண்புழு உரம், காடை, வான்கோழி, மீன் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணையில், வயல் பரிசோதனையானது கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. ஒரு ஏக்கருக்கான சிறந்த ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தைக் கண்டறிவதற்காக ஐந்து ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டக் காரணிகளான மேம்படுத்தப்பட்ட பயிர்த் திட்டத்துடன் (மக்காச் சோளத்துடன் ஊடுபயிராக பசுந்தீவன காராமணி, நிலக்கடலை, வெண்டை, சூரியகாந்தி, பல்லாண்டு தீவனப் பயிர்களான கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல், கோ 4, வேலி மசால்) கறவை மாடு வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி, மேம்படுத்தப்பட்ட பயிர் திட்டத்துடன் கறவை மாடு, மண்புழு உர உற்பத்தி, ஜப்பானிய காடை வளர்ப்பு, மேம்படுத்தப்பட்ட பயிர் திட்டத்துடன் கறவை மாடு வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி, வான்கோழி வளர்ப்பு, மேம்படுத்தப்பட்ட பயிர்த் திட்டத்துடன் மீன் வளர்ப்பு, முட்டைக் கோழி வளர்ப்பு, விவசாயிகளின் நடைமுறையில் உள்ள பயிர்த் திட்டமான வெண்டை, நிலக்கடலை சாகுபடி போன்ற காரணிகள் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
 • மேலும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் மூலம் வரும் பண்ணைப் பயிர் கால்நடை, கோழியின கழிவுகளை முறையாக மறு சுழற்சியின் மூலம் மேம்படுத்தப்பட்ட பயிர் திட்டத்துக்ககு அளித்து கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு இயற்கை உர காரணிகளான மக்கிய மாட்டுச்சாணம், மண்புழு உரம், மீன் குட்டை கசடு, மக்கிய கோழி எருவுடன் 100 சதவீதம், 75 சதவீதம், 50 சதவீதம் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரங்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து போன்றவை மண்ணில் இடப்பட்டது.

ஆராய்ச்சியின் முடிவு

 1. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பயிர்த் திட்டமான மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக பசுந்தீவன காராமணி- நிலக்கடலை, வெண்டை – சூரியகாந்தி, பல்லாண்டு தீவனப் பயிரான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ – 4, வேலி மசால் உடன் கறவை மாடு, மண்புழு உர உற்பத்தி, ஜப்பானிய காடை வளர்ப்பதன் மூலம் அதிக ஒருங்கிணைந்த பண்ணைய உற்பத்தித் திறன், அதிக நிகர வருமானம், அதிக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் வடகிழக்கு மண்டலத்துக்கு தோட்டக்கால் நிலங்களுக்கு சிறந்த ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டமாக பரிந்துரை செய்யப்பட்டது. மண்புழு உரத்துடன் 75 சதவீதம் பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி, சாம்பல் சத்து உரம் கொடுப்பதன் மூலம் அதிக பயிர் மகசூல், அதிக நிகர வருமானம், சிறந்த மண்வளம் கண்டறியப்பட்டது.
 2. மானாவாரி நிலத்தில்… பயிர், ஆடு மானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பயிர்ச் சாகுபடியுடன் வேளாண் சார்புத் தொழில்களான தீவனப் பயிர், தீவன மரங்கள், நீண்டகால புல் வகைகள், ஆடு வளர்ப்பு போன்றவற்றை ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைக்கலாம். 20 பெட்டை, ஒரு கிடா கொண்ட ஆட்டுப் பண்ணைகளுக்குத் தேவையான தரமான தீவனம், தீவனப் பயிர்கள், தீவன மரங்களுடன் தீவனப் பயிர்களை இணைத்து சாகுபடி செய்வதன் மூலம், பண்ணையிலிருந்தே ஆண்டு முழுவதும் தீவனம் பெற இயலும்.
 3. நீண்டகால வயதுடைய தீவன மரங்கள் நட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஆடுகளுக்குத் தேவையான இலை தழைகளை வெட்டும் அதிர்ச்சியைத் தாங்கித் தொடர்ந்து பயன்தரும் நிலையைப் பெற்றுவிடுகின்றன. இவற்றிலிருந்து பெறப்படும் இலை, தழைகள் 21 ஆடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
 4. தலைச்சேரி இன ஆடுகளை மானாவாரியில் வளர்க்கும்போது பல்வேறு தீவனங்களை உணவாக எடுத்துக் கொண்டு உடல் எடை கூட தலைச்சேரி இன ஆடுகள் தன் குட்டிகளின் தேவைக்கு மேலும் பால் கொடுக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் இந்த இனத்தை இரட்டைப் பலன் கொண்ட வகை என்று குறிப்பிடலாம்.
 5. 20 பெட்டை ஆடுகளிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 30 குட்டிகளைப் பெறமுடியும். ஒவ்வொரு குட்டியும் பால் மறக்கும்போது சராசரியாக 10 கிலோ உயிர் எடை உடையதாகவும் ஆண்டொன்றுக்கு 450 கிலோ வரை உயிர் எடை தர வல்லதாகவும் இருப்பதால் இவற்றிலிருந்து அதிக நிகர லாபம் பெறலாம்.
 6. இத்துடன் 21 ஆடுகள், வெவ்வேறு வயதுடைய குட்டிகளை ஆண்டு முழுவதும் கொட்டகை முறையில் பராமரிப்பதன் மூலம் அதிக இயற்கை உரம் பெறமுடியும். இத்தகைய தரமிக்க ஆட்டுக் கழிவை மண்ணில் இடுவதால் தழை, மணி, சாம்பல் போன்ற முதன்மை சத்துக்களும், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலை சத்துகளோடு ஏழு வகை மூன்றாம் நிலை சத்துகளும் பயிர்களுக்குக் கிடைக்கும்.
 7. இவ்வாறு பல்வேறு பயன்மிக்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டங்களை அந்தந்தப் பகுதிக்கேற்ப மேற்கொள்வதன் மூலம் விளைச்சலை அதிகரிப்பதுடன் சிறு, குறு உழவர்களின் நிகர லாபத்தையும் அதிகரிக்கலாம். மேலும், பண்ணைக் கழிவை மண்புழு உர எருவாக்கி பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தையும் நிலைப்படுத்தி நீண்ட காலத்துக்கு நிலையான விளைச்சலையும் பெறலாம்.
 8. பண்ணை அளவில் கிடைக்கக்கூடிய அனைத்துக் கழிவு, உற்பத்தி பொருள்களைச் சுழற்சி முறையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பயன்படுத்துவதால் உழவர்களின் உற்பத்திச் செலவைக் குறைப்பதோடு நல்ல விளைச்சலையும், லாபத்தையும் பெற முடியும்.

தொடர்புக்கு

மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை 044-27452371 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 98844 02613 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி