How to make Dried Flower in Tamil

போட்டியில்லாத அதிக இலாபத்தை தரும் உலர்மலர் தொழில்நுட்பம்

3128

போட்டியில்லாத அதிக இலாபத்தை தரும் உலர்மலர் தொழில்நுட்பம் : How to make Dried Flower in Tamil

நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவா இருக்கும். பலருக்கு பணம், சிலருக்கு பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம், அதே போல் வேறு சிலருக்கு இயற்கை சார்ந்த துறைகளில் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் விவசாயம் மற்றும் அழிந்து வரும் கைவினை கலைகளை மீட்டெடுப்பதில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதில் அதிக பலன்கள் கிடைக்காததால்தான் அந்த துறைகள் இன்னும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றன. அக்கலையையே வித்தியாசமாகவும், நவீன முறையிலும் செய்தால் அக்கலையை மீட்டெடுப்பதிலும் அதில் நல்ல இலாபமும் பார்க்கலாம்.

பலவகையான விவசாயம் சார்ந்த கலைகள் இருக்கின்றன, அதில் நம்மில் பல பேருக்கு பிரபலமாகமல் இருக்கும் முக்கியமான ஒன்று தான் உலர்மலர் தொழிநுட்பம் (Dried Flower Technology). நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் மலர்களில் 60% உலர்மலர்கள். மேலும் இந்தியாவிலே இந்த உலர்மலர் தொழில்நுட்பத்தில் அதிகம் கவனம் செலுத்துபவை தூத்துக்குடி மற்றும் கல்கத்தா. அதிலும் ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட நிறுவங்கள் சில .

அவை முறையே

1.Ramesh Flowers Pvt.Ltd

2.Floral Export Pvt.Ltd

3.Kolkatta Online Florist

4.Global Dried Flowers Pvt.Ltd

மிகக் குறைந்த நிறுவனங்களே இத்துறையில் உள்ளது என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உலர் மலர் தொழில்நுட்பம்

உலர்மலர் தொழில் என்பது மலர்களை மட்டுமல்லாமல் தாவரத்தின் தண்டு, இலைகளையும் உலர்த்தி அதிலிருந்து கலைநயம் மிக்க பொருட்களை உருவாக்குவதாகும்.

ஏன் இதைத் தேர்வு செய்யவேண்டும்?

மிகவும் சுலபமாக கையாளும் தொழில்நுட்பம்.
இயற்கையாய் கிடைக்கக்கூடியது.
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது மலர்கள்.
சிக்கனமானது.

 

எவ்வாறு மலர்களை உலரவைப்பது ?

மலர்களை உலர வைக்க பலமுறைகள் உள்ளன. அவை அனைத்துமே வீட்டிலிருந்தே அனைவரும் செய்யக்கூடிய வகையிலேயே இருக்கும்.

காற்றில் உலரவைத்தல்
அழுத்தமுறையில் உலரவைத்தல்
கிளிசரின் மூலம் உலரவைத்தல்
உலர்திகள் மூலம் உலரவைத்தல்
நீரில் உலர வைத்தல்
சூரிய ஒளியில் உலரவைத்தல்
நுண் அடுப்பு மூலம் உலரவைத்தல்
எனப் பல முறைகள் மூலம் உலர வைக்கலாம், அதில் உதாரணமாக ஒரு முறையை பார்க்கலாம்.

 

காற்றில் உலரவைத்தல்

இது மிகவும் எளிமையான முறை. இம்முறையில் மலர்களை சிறு கொத்துகளாக கட்டி தலைகீழான நிலையில் தொங்கவிட வேண்டும். இதற்கு பெரிய அளவில் உபகரணங்கள் எதுவும் தேவை இல்லை. மலரில் உள்ள ஈரப்பதத்தை பொறுத்து அது உலர்வதக்கான நேரம் அமையும். குறைந்தது ஒரு வாரத்தில் இருந்து அதிகம் ஒருமாதம் வரை ஆகலாம்.

உலர்த்திகள் மூலம் உலரவைத்தல்

இம்முறையில் மலர்களை உலரவைப்பதற்கு சிலிகா போன்ற உலர்த்திகளை பயன்படுத்தலாம். இம்முறையில் உலரவைப்பதன் மூலம் மலர்களின் வடிவம் மாறாமல் இருக்கும்.

உலர வைத்தபின் மலர்களை அப்படியே கலைநயம் மிக்க பொருட்களாக விற்பனை செய்யலாம் அல்லது மலர்களுக்கு வர்ணப்பூச்சு கொடுப்பதன் மூலம் உலர்மலர்கள் புதுப்பொழிவுடன் காட்சியளிப்பதால் நுகர்வோரின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும்.

உலர்மலர்களை வைத்து என்னென்ன செய்யலாம்?

இன்று பாசத்திற்கும், பரஸ்பர நட்பிற்கும் அடையாளமாக இருப்பது மலர்களாலான பூச்செண்டுகளும், பூங்கொத்தும் தான். ஏன் இறந்தவர்களிடம் உள்ள பாசத்தின் அடையாளமாக வைப்பதும் மலர்வளையம் தான்.

இதையே உலர்மலர்களால் ஆன பூச்செண்டை கொடுப்பதன் மூலம் நம் பாசத்தின் அடையாளம் வித்தியாசமாக இருக்கும். உலர்மலர்களை வைத்து பூச்செண்டு மட்டும் அல்ல இன்னும் பல கைவினை பொருட்களையும் செய்து அசத்தலாம்.

அவை என்னனென்ன ?

1. கட்டமைக்கப்பட்ட உலர்மலர் (Framed pressed flower & Diy dried flower shadow box)

நாம் அனைவருக்கும் வீடுகளை அழகாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல ரூபாய் விலைகொடுத்து அலங்கார பொருட்களை வாங்கி வைப்போம். இதற்கு மாற்றாக உலர்மலர்களாலான பொருட்களை பயன்படுத்தலாம். இவை வீட்டை மேலும் அழகூட்டும்.

2. மலர்செண்டு (Boquets)

திருமணம் மற்றும் பல நிகழ்ச்சிகளில் இன்றியமையாததாய் இருப்பது மலர்செண்டு. அவை இந்த உலர் மலர் தொழில்நுட்பம் மூலம் தான் செய்யப்படுகிறது.

3. உலர்மலராலான கைபேசியின் பின்அட்டை (Pressed and dried flower phone case)

இன்றைய நவீன உலகில் கைபேசி நம்முடைய ஆறாவது விரலாகவே மாறிவிட்டது என்றே கூறலாம். அதிலும் பலர் நம் கைபேசியை அனைவரும் பார்க்கவேண்டும் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து அதன் பின்புறத்தில் பல கூடுதல் வேலைகளை செய்வர். ஆனால் உலர்மலரினாலான கைபேசியின் பின் அட்டை வித்தியாசமாக இருப்பதால் எளிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கமுடியும்.

4. உலர் பூக்களின் உதிர்ந்த கதம்பம் /உதிர்ப்பூக்களின் கலவை (Potpurri and Dried flower scented sachets)

உலர்ப்பூக்களின் கலவையை வீடுகளில் வாசனைக்காக பயன்படுத்துவர். உலர்மலர்களின் உதிர்ந்த கதம்பத்தினை பாக்கெட்டில் அடைத்து மகிழுந்துகளிலும்(Cars) வாசனைக்காக பயன்படுத்தலாம்.

5. கதவு மாலை (Dried Flower Door Wreath)

வீடுகளின் முன் உள்ள கதவுகளில் அழகுக்காகவும், மணப்பெண்களின் தலையில் வைக்கும் கிரீடத்திற்கும் இம்மலர்களை வைத்து உருவாக்கலாம்.

மேலும் பல,

6.உலர்மலர் கோஸ்டெர்ஸ் (Dried Flower Coasters)

7.உலர்மலர் மோனோக்ராம் (Dried Flower Monogram)

8.உலர்மலர் ப்ரூச் (Dried Flower Brooch)

9.உலர்மலர் துகள்கள் (Dried flower confetti)

10.உலர்மலர் வாழ்த்துமடல் (Dried flower Greeting Card)

இப்படி மலர்களை உலர வைப்பதற்கு பயிற்சிகள் தேவையா? எனப் பார்க்கும் போது, அடிப்படையான சில செயல்முறைகள் யூடியூப் களிலேயே இருக்கிறது. மேலும் முழு முயற்சியில் இதில் இறங்குவதற்கு முன்பாக தோட்டக்கலைத் துறை வல்லுனர்களிடம் பயிற்சி பெறுவது நல்லது.

இதை சிறிய அளவில் குடிசைத்தொழிலாகவும் பெரியளவில் வணிக தொழிலாகவும் செய்யலாம். இப்படி வித்யாசமாக தொழிலினை ஆய்ந்து அதிலுள்ள இலாப நட்டங்களை தெரிந்து மேற்கொள்வதன் மூலம் நம்மையும், அது சார்ந்த விவசாயத்தையும் உயர்த்தலாமே.!

ஆக்கம்: ப. கோகிலா

நன்றி
kalanipoo

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *