siruthozhil

உலகையே திரும்பி பார்க்கவைத்த புதிய தொழில்கள்

நம்மில் பலருக்கு வாழ்க்கையில் முதல்முறையாக தொழில் தொடங்கி ஜெயிக்க ஆசை. இன்னும் சிலர், ஏற்கெனவே ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்துகொண்டு இருப்பார்கள். ஆனாலும், அதிக லாபம் தரக்கூடிய புதிய தொழில் ஏதேனும் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்த்துவிடத் துடிப்பார்கள். இந்த இரண்டு வகையினருக்கும், அதிக ரிஸ்க் இருந்தாலும் அதிக லாபம் தரக்கூடிய புதிய பொருளாதாரத் தொழில்கள் ஏற்றவை. அது என்ன புதிய பொருளாதாரத் தொழில்கள் என்று கேட்கிறீர்களா..?

1990-ல் நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது பல துறைகளிலும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்தன. தொலைபேசித் துறையில் பார்தி ஏர்டெல், ஐ.டி. துறையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, வங்கித் துறையில் ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., யெஸ் பேங்க், மருந்துத் துறையில் பயோகான், டாக்டர் ரெட்டீஸ் என பல நிறுவனங்கள் உருவாகி, இந்தியாவின் புதிய தொழில் முகத்தை உலகுக்கு காட்டியது. கன்ஸ்யூமர் துறையில் ஐ.டி.சி., கவின்கேர், மாரிகோ என பல நிறுவனங்கள் உருவாகி, இன்றும் சக்கைப்போடு போட்டு வருகின்றன.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பொருளாதார மாற்றங்களினால் இன்றும் புதிது புதிதாக பல தொழில் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவற்றில், இன்டர்நெட், மொபைல் டெக்னாலஜி, டெலிகாம் போன்ற துறைகளில் உருவாகிவரும் வாய்ப்புகளை புதிய பொருளாதாரத் தொழில்களாக நாம் கருதலாம்.

உதாரணத்திற்கு, உணவகங்கள் (ரெஸ்டாரன்ட்ஸ்) முன்பெல்லாம் ஒரு வகைதான். ஆனால், இன்றோ துரித உணவகம், தோசை ஹட், பிட்ஸா ஹட், சைனீஸ், அமெரிக்கன், இத்தாலியன், அரேபிக் என்று பல வகை – ஒவ்வொருநாளும் பெருகிக்கொண்டே போகின்றன.

கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் ஒரு சின்ன அப்ளிகேஷனை கஷ்டப்பட்டு உருவாக்கி, அதனைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதைச் சொல்லி பிரபலப்படுத்துகிறார்கள். அது ஓரளவுக்கு பிரபலமாகி, பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பல நூறு கோடி ரூபாய்க்கு அந்த சாஃப்ட்வேரை விற்றுவிட்டு, சென்றுவிடுகிறார்கள்.

இவை மட்டுமல்ல, இன்னும் பல புதிய தொழில் வாய்ப்புகளைச் சொல்லலாம். உதாரணமாக, கால் டாக்ஸி ஏற்கெனவே இருக்கிறது. இப்போது கால் டாக்ஸிக்குப் பதிலாக கால் ஆட்டோவும் வந்துவிட்டது! வாடகைக்கு சைக்கிள் விட்டோம் முன்பு. இனி வாடகைக்கு கார்/பைக் விட்டால் எப்படி இருக்கும்?

நாம் எல்லோரும் கடைகள் வைத்து ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் சேவை செய்கிறோம். ஆன்லைன் கடை வைத்து உலகம் முழுவதும் தொழில் செய்தால் எப்படி இருக்கும்? டாக்டர்களை பல வியாதிகளுக்கும் நேரிலேயே சென்று பார்த்து உரிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு வருகிறோம். போன் அல்லது இ-மெயில் மூலம் டாக்டர் கன்சல்டிங் செய்தால் எப்படி இருக்கும்? மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கி வருகிறோம். ஆன்லைன் அல்லது போன் மூலம் மருந்து விற்பனை செய்தால்?

இதுபோல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு என்னென்ன தேவை என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். புதிய ஒயினை புதிய கோப்பையில் தர முடியுமா என்று பாருங்கள். அல்லது பழைய ஒயினை புதிய கோப்பையில் தரமுடியுமா என்று யோசியுங்கள்.  புதிய தொழில்கள்

அமெரிக்காவிற்கும் பிற நாடுகளுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், அமெரிக்கர்கள் குறைந்த மார்ஜின் உள்ள பிசினஸைத் தூக்கி எறிந்து கொண்டே இருப்பார்கள். அதேசமயம், புதிய ஹை மார்ஜின் தொழில்கள் உலையில் வெந்துகொண்டே இருக்கும். இதுவே அந்நாட்டை எப்போதும் உலகளவில் தலைமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதுமாதிரியான தொழில்களைத் தேர்வு செய்யும்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அனுபவம் இல்லாத புதிய தொழில், ஜெயிக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்காது என்பதால் முதலீடு கிடைப்பது கடினம், அரசின் சட்டதிட்டங்கள் திடீர் பாதகங்களை உருவாக்கலாம்… என நெகட்டிவ் அம்சங்கள் இத்தொழிலில் இருந்தாலும், பாசிட்டிவ் விஷயங்களும் நிறைய இருக்கவே செய்கின்றன.

புதிய தொழில்கள் மூலம் நம் நாட்டில் தோண்டி எடுக்கவேண்டிய பணம் இன்னும் ஏராளமாக உள்ளது. அதைத் தோண்டுபவராக ஏன் நீங்கள் இருக்கக் கூடாது? அப்படி நீங்கள் தோண்ட நினைத்தால், ஹை மார்ஜின் பிசினஸாக யோசியுங்கள். உங்கள் சிந்தனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். வெளியில் சென்று உங்கள் எண்ணங்களை உங்களுக்கு நம்பகமானவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். பிசினஸ் ப்ளானை பட்டை தீட்டுங்கள்! தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் உழைப்பு இன்னும் சில ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதித்துத் தரும் என்பதற்கு மூன்று நிஜ உதாரணங்களை இனி சொல்கிறேன்.

ரெட்பஸ்:

2006-ல் க்ஷீமீபீஙிus.வீஸீ என்ற வெப்சைட் பனிந்த்ர சமா மற்றும் இரண்டு நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் பிட்ஸ் பிலானியில் படித்தவர்கள். தீபாவளியின்போது தாங்கள் வேலை பார்த்த இடமான பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டிற்கு பஸ்ஸுக்கு டிக்கெட் கிடைக்காமல் தவித்தபோது உருவான ஐடியாதான் ரெட்பஸ்.இன்

இந்த வெப்சைட் மூலம் இந்தியாவில் அனைத்து இடங்களிலிருந்தும் தொலைதூர பஸ்ஸிற்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சமீபத்தில் இந்த நிறுவனத்தினை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நேஸ்ப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் இந்திய அங்கமான இபிபோ ரூ.500-600 கோடிக்கு வாங்கியுள்ளது.  மூன்று பேர் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்ததற்கு கிடைத்தப் பரிசுதானே இது!

ஜஸ்ட்டயல்:

ஒரு தொழிலின் டெலிபோன் எண் அல்லது முகவரியை அறிந்துகொள்ள ஜஸ்ட்டயல் என்ற நிறுவனத்தின் சேவையை உங்களில் பலர் பயன்படுத்தி இருப்பீர்கள். இத்தொழிலை ஆரம்பித்தவர் மும்பையைச் சேர்ந்த வி.எஸ்.எஸ். மணி. இதற்குமுன் பல தொழில்களில் தனது கையை நனைத்தார். ஆனால், இத்தொழில்தான் அவருக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது. வெறும் ரூ.50,000-த்தைக்கொண்டு 1996-ல் தனது 29-வது வயதில் ஜஸ்ட்டயலை ஆரம்பித்தார். ஓரிரு மாதங்களுக்கு முன்பு வந்த ஐ.பி.ஓ-வில் பல நூறு கோடிக்கு அதிபதியாக மாறியிருக்கிறார்.

மேக்மைடிரிப்:

தீப் கார்லா மேக்மைடிரிப் என்ற ஆன்லைன் டிராவல் வெப்சைட்டை 2000-த்தில் புதுடெல்லியில் ஆரம்பித்து 2010-ல் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் வெற்றிகரமாக லிஸ்ட் செய்தார். ஒரு பங்கு அமெரிக்க டாலர் 14 என விற்று 70 மில்லியன் டாலர்களை நிறுவனம் திரட்டியது. கூடிய சீக்கிரம் இந்திய சந்தையில் இவரது நிறுவனத்தின் பங்கு பட்டியலிடப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

இதுமாதிரி நீங்களும் ஏன் ஒரு புதிய தொழிலைத் தொடங்கக்கூடாது? #புதியதொழில்கள்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *