அயிரை மீன்

அயிரை மீன் வளர்ப்பில் தினமும் இலாபம் பல ஆயிரம்

மிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பெருமளவு மக்கள் அயிரை மீன் உணவு வகைகளை விரும்பி உண்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவற்றின் சுவை. அதனால் இதன் உத்தேச விலை ஒரு கிலோவிற்கு 1500 ரூபாய் என்று உள்ளது. முன்பு இவை வண்ண மீன் வளர்ப்புத் தொட்டிகளில்வைத்தே வளர்க்கப்பட்டு வந்தது. அவை காட்சிப் பொருளாக இருந்த காலம் மாறி தற்போது வருமானத்தை ஈட்டித் தரும் பண்ணை தொழிலாக உருவாகியுள்ளது.
அயிரை, குளங்கள் மற்றும் தொட்டிகளின் அடிப்பகுதியில் வாழும்தன்மை கொண்டது. நம் நாட்டில் இயற்கையாகவே அமையப்பெற்ற ஏரி, குளம், குட்டைகளில் காணப்படுகிறது. தற்போது நீர்வளம் குறைந்துகொண்டே வருவதால், இந்த வகை மீன் இனமும் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் பெரும்பாலான விவசாயிகள் அயிரை மீன் வளர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
நன்னீர் மீன் வளர்ப்பில் அயிரை மீன் வளர்ப்பு ஒரு புதிய முறையாகும். இது இதர மீன் வளர்ப்பு முறைகளில் இருந்து மாறுபட்டது. இவைகளை வளர்ப்பதற்கு சிறிய குளங்களே போதுமானது. மணல் கலந்த குளம் சிறந்தது. அதன் இனப்பெருக்கத்திற்கு சிமெண்டு தொட்டிகள் போதுமானது.
முதலில் அயிரை மீன் குறித்த சில அடிப்படையான தகவல்களை அறிந்து கொள்வோம்.
அயிரை மீன்கள் சிறிய உடல் அமைப்பை பெற்றவை. 2 முதல் 4 கிராம் எடைகொண்டவை. இதன் உடல் அமைப்பானது உருண்டு காணப்படும். துடுப்புகளில் கருப்பு நிறப் புள்ளிகளுடன் நீண்ட மூக்குடனும் சாம்பல் நிறத்தில் தோன்றும். வயிற்றுப் பகுதியில் வட்ட வடிவ துடுப்பு காணப்படும்.
அயிரை மீன்கள் குளத்தின் அடிப்பகுதியிலும் மண்ணுக்குள்ளும் புதைந்து வாழும். இதன் வாய் பகுதி கீழ்நோக்கி அமைந்திருக்கும். வாயின் அருகே உணர்வு நீட்டிகள் எனப்படும் உறுப்புகளும் உண்டு. இவை இந்த மீனின் வகைக்கு ஏற்ப இரண்டு அல்லது ஐந்து ஜோடிகளை கொண்டிருக்கும்.
அயிரை மீனின் சிறிய கண்கள் தோல்கொண்டு மூடிய நிலையில் காணப்படும். அதற்கு செதில் கிடையாது. அப்படியே இருந்தாலும் சிறியதாக தோலுடன் ஒட்டி காணப்படும். இவைகளை கண்டறிவது கடினம்.
இவற்றில் வளர்ச்சியடையாத காற்றுப்பை உண்டு. சில வகை அயிரை மீன்கள் காற்றை உட்கொண்டு வாழக்கூடியவை.
அறிவியல் ரீதியாக உணவுக்காக வளர்க்கப்படும் அயிரை மீன்களில் 3 வகைகள் உள்ளன. அவை: லேப்பிடோசெப்ளஸ் கோரமண்டலின்சில், லேப்பிடோசெப்ளஸ் மேக்ரோசீர், லேப்பிடோசெப்ளஸ் ஸ்பெக்ரம்.
இந்த மீன் இனங்கள் அமைதியாக, தொடர் நீரோட்டம் உள்ள பகுதியில் வசிக்கும். கற்கள் உள்ள பகுதிகளில் கூட்டமாக காணப்படும். குளத்தின் அடிப்பகுதியில் உள்ள அழுகிய மற்றும் மக்கிய பொருட்களை உணவாக உட்கொள்ளும்.
அயிரை மீன்கள் லேசான காரத்தன்மை உள்ள நீரில் வளரக்கூடியது. இவை நீர்த்தாவரங்கள் அதிகமாக உள்ள இடங்களில் மறைந்து வாழும்.
இவை மணற்பாங்கான தரைப் பகுதியை கொண்ட நீர்ப்பரப்பிலும், சிறிய கற் களைகொண்ட நீர்ப்பரப்பிலும் இனப்பெருக்கம் செய்யும்.
அயிரை மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கத்திற்கு, இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள சீதோஷ்ணநிலை ஏற்றதாக உள்ளது.

5000 முதலீட்டில் மதம் இலாபம் 25000


அயிரை மீன்களை சிமெண்டு தொட்டி அல்லது கண்ணாடித் தொட்டிகளில் இனப் பெருக்கம் கொள்ளச்செய்யலாம். அதற்கு 26 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தேவைப்படுகிறது. இந்த மீனை ஆண், பெண் என வகைப்படுத்துவது சற்று சிரமம்.
இனப்பெருக்கத்திற்கு 4.5 சென்டிமீட்டருக்கு மேல் வளர்ந்த மீன்களை தேர்வு செய்யவேண்டும். ஆண், பெண் மீன்களை தேர்வு செய்து சிமெண்டு தொட்டியில் இட்டால் இனப்பெருக்கம் ஏற்படும். பொதுவாக ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை இதன் இனப்பெருக்க காலமாகும்.
தொட்டியின் அடிப்பகுதியில் ஆற்று மணல் அல்லது களிமண்ணை மூன்று அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, தொட்டியில் போதிய அளவு நீரை நிரப்ப வேண்டும். நீர் கலங்கி காணப்படும். அப்படியே மூன்று நாட்கள் வரை வைத்திருக்கவேண்டும். அப்போது தொட்டி நீரில் காற்றை செலுத்த வேண்டும்.
பின்பு முதிர்ச்சி அடைந்த ஆண், பெண் மீன்களை தேர்வு செய்து ஒரு ஆண் மீனுக்கு ஒரு பெண்மீன் என்ற கணக்கில் இருப்பு செய்ய வேண்டும். முன்னதாக அவைகளுக்கு தேவையான உயிர் உணவு மற்றும் குறுணை உணவுகளை உள்ளே இடுவது அவசியம். 15 முதல் 20 நாட்களில் மீனானது முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
பொரித்த இளம்குஞ்சுகள் தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள அழுக்கு மற்றும் மக்கிப்போன பொருட்களை உணவாக உட்கொள்ளும். இளங்குஞ்சுகளை பிடிப்பது கடினம். தொட்டியில் உள்ள நீரை முழுவதும் வெளியேற்றினால்தான், பிடிக்கமுடியும்.
மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் குளங்களிலேயே இதனை எளிதாக வளர்க்கலாம். அயிரை மீன்களை மட்டும் தனியாக வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அயிரை மீனின் இளம் குஞ்சுகளை கெண்டை மீன்களுடன் சேர்த்து வளர்க்க வேண்டும்.
பிற மீன்களை உண்ணும் பகை மீன்இனங்கள் உள்ள குளங்களில் அயிரை மீன்களின் பிழைப்புத்திறன் குறைவாகவே இருக்கும். எனவே அயிரை மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் போது, பகை இன மீன்கள் மற்றும் தவளைகள் அக்குளங்களில் நுழைவதை முழு வதுமாக தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அயிரை மீன் களுடன் இந்தியப் பெருங்கெண்டை இனங்களான கட்லா, ரோகு, மிர்கால் ஆகியவற்றை சேர்த்து வளர்த்தால், மீன்கள் நல்ல வளர்ச்சியையும், அதிக பிழைப்புத்திறனையும் அடையும். அயிரை மீன்களுடன் சாதா கெண்டை, விரால், கெளுத்தி, ஜிலேபி, உளுவை ஆகிய மீன் இனங்களுடன் கலந்து வளர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பயிற்சி மற்றும் விவரம் பெற முகவரி:
தலைவர்
வளம்குன்றா நீர் உயிர் வளர்ப்பு
தமிழ் நாடு மீன்வள பல்கலைகழகம்
பறக்கை -62901
போன் – 04652 286107
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.