வளர்ப்பு பயிற்சி மையம்

நாட்டு கோழி வளர்ப்பில் அதிக இலாபம் பெற

11370

நாட்டுக்கோழி வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுய வேலைவாய்ப்பை தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது. நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியை விரும்பி உண்ணக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவற்றின் தேவை அதிகரித்து நல்ல விற்பனை வாய்ப்புள்ள தொழிலாகவும் விளங்குகிறது.

கோழிப் பண்னை பராமரிப்புச் செலவில் 60 – 70 % தீவனத்திற்கு மட்டும் செலவிட நேரிடுகிறது. கோழிகளின் வளர்ப்பு முறை மற்றும் அதன் பருவத்திற்க்கு ஏற்றவாறு தீவனத்தில் மாற்றம் செய்து தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்குமாறு தீவனம் அளிக்கும் போது அதன் உற்பத்தி திறன் மேம்பட்டு பண்னையின் இலாபம் அதிகரிக்கிறது.

 

நாட்டுக்கோழித் தீவனத்தில் முக்கிய ஊட்டச்சத்துக்கள்

       நாட்டுக்கோழித் தீவனத்தில் மாவுச் சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் சரியான விகிதத்தில் தேவையான அளவில் தீவன மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்.

தீவன மூலப்பொருட்களும் அதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களும்

வ. எண். தீவன மூலப் பொருட்கள் கிடைக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள்
1. மக்காச்சோளம், கம்பு, சோளம், அரிசி மற்றும் தானிய வகைகள் மாவுச் சத்து
2. சோயா, கடலை, சூரியகாந்தி பிண்ணாக்குகள் புரதச் சத்து
3. அரிசி, கோதுமை தவுடுகள் நார்ச் சத்து
4. மீன் தூள் புரதம், கால்சியம்
5. டை – கால்சியம் பாஸ்பேட் (டிசிபி) கால்சியம், பாஸ்பரஸ்
6. கிளிஞ்சள் கால்சியம்
7. கால்சைட் கால்சியம்

 

   வளர்ப்பு முறைக்கேற்ற தீவன மேலாண்மை

நாட்டுக்கோழிகளை குறைந்த எண்ணிக்கையில் புறக்கடை வளர்ப்பு முறையிலும், அதிக எண்ணிக்கையில் தீவிர முறையில் பண்னைகளிலும் வளர்க்கின்றனர்.

 

புறக்கடை வளர்ப்பு முறையில் தீவன மேலாண்மை

புறக்கடை வளர்ப்பு முறையில் தீவனத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. அரிசி, சோளம், கம்பு போன்ற தானியங்களையும், வயல்வெளிகளில் உள்ள புல், புழு, பூச்சிகளையும், வீட்டில் மீதமான காய்கறிகள், கீரைகளையும் உண்டு வளர்கின்றன. கோழிகளுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப்படுவதில்லை, உற்பத்தி திறனும் குறைகிறது.

ஆகவே கோழிகளுக்கு மேய்ச்சலுடன் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கிய சமச்சீர் தீவனத்தை (மாதிரி தீவன அட்டவனை) ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு 50 – 60 கிராம் என்ற அளவில் அளிக்கும் பொழுது அதன் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது, நல்ல தரமான முட்டைகள் கிடைப்பதுடன் குஞ்சு பொரிக்கும் சதவிகிதமும் அதிகரிக்கிறது மற்றும் இறைச்சிக் கோழிகளின் எடையும் அதிகரிக்கிறது.

மேலும், அதிக புரதச் சத்து மிக்க அசோலாவை உற்பத்தி செய்து தினமும் அளிக்கலாம். அசோலாவில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் முட்டையிடும் கோழிகளுக்கு மிக பயனுள்ளதாகும். காய்ந்த கிழங்கு வத்தலை 10 % நாட்டுக்கோழித் தீவனத்தில் கலந்து தீவனமாக அளிக்கலாம். செலவுக் குறைவான பானைக் கரையானை உற்பத்தி செய்தும் கோழிகளுக்கு அளிக்கலாம்.

 

தீவிர முறை வளர்ப்பில் தீவன மேலாண்மை

      வியாபார நோக்கில் வளர்க்கப்படும் இம்முறையில் பண்ணையை இலாபகரமாக நடத்த தீவன மேலாண்மை மிக முக்கியமானதாகும். கோழிகளின் பருவத்திற்கு ஏற்ப குஞ்சு பருவம், வளரும் கோழிகள் மற்றும் முட்டை கோழித்தீவனம் என அதன் பருவத்திற்கு ஏற்றவாறுஊட்டச்சத்தில் மாற்றம் செய்து தீவனம் தயாரித்து அளிக்கப்பட வேண்டும்.

குஞ்சு பருவத் தீவனம்

குஞ்சு பருவத் தீவனத்தில் புரதச்சத்து அதிகமாகவும் நார்ச்சத்து குறைவாகவும் உள்ளவாறு தீவனம் தயாரிக்கப்பட வேண்டும். கோழி குஞ்சுகள் சிறந்த முறையில் வளர்ச்சி அடைய முட்டையிலிருந்து குஞ்சு பொறித்தவுடன் உடனடியாக தீவனம் அளிக்கப்படவேண்டும். தீவனம் உட்கொள்ள ஆரம்பித்தவுடன் உணவுக்குடல் செயல்பட தொடங்குகிறது. இதன்மூலம் கோழிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கும் ஏதுவாக அமைகிறது.

நல்ல நோய் எதிர்ப்பு திறன் உள்ள கோழிகள் நுண்கிறுமிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும், கோழிகள் வளர்சிதை மாற்றக் கோளாறுகளினால் (Metabolic Disorder) பாதிக்கப்படாமல் ஆரோக்கியமான முறையில் வளர தொடங்கி சிறந்த தீவன மாற்று திறனை வெளிப்படுத்துகின்றன.


வளர் கோழிப் பருவத் தீவனம்

       இப் பருவக் கோழிகளுக்கு குஞ்சு பருவ தீவனத்தைக் காட்டிலும் புரதச் சத்து குறைவாகவும் நார்ச் சத்தின் அளவை அதிகரித்தும் தீவனம் தயாரிக்கப்பட வேண்டும்.

முட்டைக் கோழிப் பருவத் தீவனம்

முட்டை பருவக் கோழிகளுக்கு நார்ச் சத்தை அதிகரித்தும் மற்றும் முக்கியமாக தேவையான அளவு கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் 2:1 என்ற விகிதத்தில் உள்ளவாறு தீவனம் தயாரித்து அளிக்கப்பட வேண்டும்.

நாட்டுக் கோழிகளுக்கான மாதிரித் தீவன அட்டவணை

மூலப்பொருட்கள் குஞ்சு பருவத் தீவனம்(0 – 8 வாரம்) வளர் கோழிப் பருவ தீவனம்(9 – 22 வாரம்) முட்டைக் கோழிப் பருவ தீவனம்(23 வாரத்திற்கு மேல்)
தானிய வகைகள் (மக்காச்சோளம், கம்பு, சோளம், கோதுமை) 53 53 54
பிண்ணாக்கு (சோயா / கடலை) 28 23 20
தவுடு (அரிசி / கோதுமை தவுடு) 10 15 13
மீன் தூள் 5 5 6
டிசிபி 1 1 1
கால்சைட் 1 1
கிளிஞ்சள் 4
தாது உப்புக் கலவை 2 2 2
மொத்தம் 100 100 100

                தீவன மூலப்பொருட்கள் பூஞ்சான் தொற்று இன்றி தரமானதாகவும் நன்கு காய்ந்த (நீர் சதவீதம் < 10 %) மூலப்பொருட்களை கொண்டு தீவனம் தயாரிக்கப்பட வேண்டும்.  தீவனத்தை அதிக நாட்கள் சேமித்து வைக்காமல் தேவைக்கேற்ப அவ்வப்பொழுது தயாரித்து கோழிகளுக்கு அளிக்கும் பொழுது சிறந்த தீவன மாற்றுத் திறனுடன் இலாபம் அதிகரிக்கிறது.

      தீவனக் கலன்கள் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு (1:50) இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு தேவையான தீவனத்தை ஒரே வேளையில் அளிக்காமல் இரண்டு அல்லது மூன்று வேளையாக பிரித்துக் கொடுக்கவேண்டும். குஞ்சு பருவத்தில் 10 – 30 கிராம், வளர் பருவக் கோழிகளுக்கு 40 – 60 கிராம் மற்றும் முட்டை பருவக் கோழிகளுக்கு 90 – 110 கிராம் என்ற அளவில் தினமும் சமச்சீரான தீவனத்தை அளிக்க வேண்டும்.

      Dr. V. Kumaravel

      மேலும், பண்ணையாளர்கள் நாட்டுக் கோழிகளுக்கான தீவன மூலப்பொருட்கள், தீவனத்தை அவ்வபொழுது தீவன ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்வதால் அதிலுள்ள ஊட்டச் சத்துக்களின் அளவை தெரிந்துக் கொள்வதோடு பூஞ்சான் தொற்றையும் கண்டறிந்து பெரும் இழப்பை தவிர்க்கலாம்.

இவ்வாறாக நாட்டுக்கோழி வளர்ப்போர் மேற்கண்டவாறு தீவன மேலாண்மை நுட்பங்களை பின்பற்றி பண்ணையின் இலாபத்தை அதிகரிக்கலாம்.

மேலும் விவரம் அறிய:

மருத்துவர். வ. குமரவேல் மற்றும் முனைவர். சு. செந்தூர்குமரன்

உதவி பேராசிரியர், வேளான் அறிவியல் நிலையம்,

குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம் – 630 206

E.mail : drkumaravelv@gmail.com , 04577 264288


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *